நெருப்புக்காய்ச்சலில் இருந்து எம்மை தற்காத்துக்கொள்ள.. – Dr.P.யோண்சன்

நெருப்புக்காய்ச்சல் ஒருவகை பக்றீரியாவால் ஏற்படுகின்ற தொற்றுநோயாகும். இந்த நோயை ஏற்படுத்துகின்ற பக்றீரியாவின் பெயர் சல்மெனெல்லா தைபி (Salmonella Typhi). இந்த நோய்க்கிருமிகள் பிரதானமாக நோய்க்கிருமியின் தொற்றுக்கு உட்பட்ட நீர், உணவு என்பவற்றினால் பரவுகின்றது. மனிதனுக்கு தொற்று
ஏற்பட்டு 10 நாட்களின் பின்னரே நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன.

இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகள்

விட்டு விட்டுக் காயும் உயர்காய்ச்சல்,தலைவலி, வயிற்றுநோ, வாந்தி, தொடக்ககாலங்களில் மலச்சிக்கல், பின்னர்வ யிற்றோட்டம் என்பனவாகும். பெரும்பாலானவர்கள் மருத்துவ உதவிகளால் சுகப்படுத்தப்படுகின்றனர். பலர் மருத்துவ உதவியின்றி இந்த நோயின் தீவிர சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடலாம். எனவே இந்த நோய்க்குரிய அறிகுறிகள் இருப்பவர்கள் நோயின் ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுவதன் மூலம் நோயின் சிக்கல்களையும் இறப்பையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

இந்த நோயின் சிக்கல்கள் (Complication) பெரும்பாலும் இரண்டு வாரங்களின் பின்னரே ஏற்படுகின்றன. இந்த நோயின் தாக்கத்தால் சிறுகுடல் சேதமடைதல், சிறுகுடலில் இருந்து பெருமளவு இரத்தப்பெருக்கு, செப்ரிக் சொக் (Septicshock) எனப்படும் குருதி அமுக்கம் குறைவடைதல், DIC எனப்படும் இரத்தப்பெருக்கு போன்ற பலவகை சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த நோய் ஏற்பட்டு குணமானவர்களில் 10 வீதமானவர்கள் எந்த விதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் அவர்களின் மலத்துடன் இந்த நோய்க்கான கிருமியைத் தொடர்ந்து வெளியேற்றலாம். இவர்கள் நோய்க்காவிகள் என்று அழைக்கப்படுவர். இவர்களும் இனங் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம்.

இந்த நோயை உறுதிப்படுத்த பலவகை சோதனைகள் செய்யப்பட்ட போதிலும் பிரதானமாக Blood Culture என்ற பரிசோதனை முக்கியமானதாக விளங்குகின்றது. நோயாளியின் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாத்திரைகளாகவோ அல்லது ஊசி மருந்தாகவோ இந்த நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றது. இந்த மருந்துகள் மொத்தமாக 7-10 நாட்கள் வரை வழங்கப்படும். இந்த நோய்க்கு உட்பட்டவர்கள் நோய்க்காலங்களில் இலேசான ஆகாரங்கள் உண்ணுதல் (Light diets) முக்கியமாகும். சோறு, பிட்டு போன்ற உணவுகள் நோயின் தீவிரத்தை
கூட்டக் கூடியவை.

இந்த நோயைக் தடுக்கும் வழிமுறைகள்

முறையாகவும் சுத்தமாகவும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அருந்துதல், வீடுகளில் உணவைச் சரியாக மூடி வைத்தல், சுத்தமாகப் பரிமாறுதல் போன்றவையாகும். இதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதை குறைக்க முடியும். இதே போன்று வீடுகளில் கொதித்தாறிய நீரைப்பருகவேண்டும். சகல வீடுகளிலும் சரியான மலசலகூட வசதிகள் கடைப் பிடிக்க வேண்டும். எப்பொழுதும் உணவு அருந்தும் முன்பும், மலம் கழித்த பின்னரும் சவர்க்காரம் கொண்டு கைகளை நன்கு கழுவவேண்டும். இயலுமானவரை கடைகளில் உண்ணும் பழக்கங்களைத் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். சகல உணவுக் கடைகளிலும் முறையாகவும் சுத்தமாகவும் உணவுதயாரிக்கப்படுகின்றனவா? அவை சரியான முறையில் பாதுகாக்கப்படுகின்றனவா? என்பதை சுகாதார சேவையாளர்கள் உறுதிப்படுத்துவதன் மூலமும் இந்த நோயைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

எனவே நாம் மேற்குறிப்பிட்ட தடுப்பு முறைகளைக் கவனத்தில் கொண்டு இயலுமானவரை இத்தொற்று நோயில்இ ருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் இந்த நோயின் அறிகுறிகள் காணப்படின் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று இந்த நோயின் தாக்கத்திலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

Dr.P.யோண்சன்

பொது வைத்திய நிபுணர்