களைநாசினியை பயன்படுத்தும்போது ….. Prof.G. Mikunthan

களைகள் எனப்படுவவை மனிதனால் பயிர்செய்யப்படும் நிலத்தில் அந்த பயிர்களுக்கு சேதத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தவல்ல தாவரங்கள் என பொருள்படலாம். அதாவது களைகளும் தாவரங்களே ஆனால் அவற்றை நாம் பயிர்களாக கொள்வதில்லை. ஏனெனில் அவற்றை நாம் எமக்கு தேவையற்றவை என எண்ணிவிடுகின்றோம். அதற்கும் மேலாக களைநாசினிகளைப் பயன்படுத்தி அவற்றை அழித்துவிடுகின்றோம். அப்படியொரு கைங்கரியத்தில் பயன்படுத்துப்படும் களைநாசினிதான் கிளைபோசேற்று (Glyphosate) எனப்படும் ரவுண்டப் (Roundup). இந்த களைநாசினியை பயன்படுத்தும்போது விரைந்து வளரும் களைகளின் குருத்து பகுதியில் அவற்றின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் அமினோஅமிலங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது தடுக்கப்படுகின்றன. இதனால் தாவரத்திற்கு தேவையான குறிப்பிட்ட அமினோஅமிலங்கள் கிடைக்காமையால் களைமேலும் வளரமுடியாமல் இறக்கின்றது. பொறிமுறை சுலபமானதாக தான் இருக்கின்றது. இவ்வாறு களைநாசினியை பயன்படுத்தும் போது களைகள் விரைந்து வளர்வதனால் அது வளர்ச்சியில் முன்னிற்பதும் நெல் அல்லது பயிர்கள் பிந்தியே முளைக்கின்ற காரணத்தால் அவற்றிற்கு கிளைபோசேற்று களைநாசினியால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்பது இலகுவாக புரிந்து கொள்ள முடிகின்றது அல்லவா!. இதற்குப் பின்னால் இன்னொரு அண்மைக்கால கதையும் உண்டு. அதுதான் இந்த களைநாசினி தற்போது நமது நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. கிளைபோசேற்று இனை அதிகமாக பயன்படுத்துவதனால் அதனதுமீதிகள் நீருடன் கலந்து குடிநீரிருடன் மனிதனினுடம்பில் செறிவாகி அதன் மூலம் இனந்தெரியாத சிறுநீரக நோய் மத்திய மாகாணத்தில் பலருக்கு ஏற்பட்டதாகவும் அதனால் பலவிவசாய பெருமக்கள் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கிளைபோசேற்று தடைசெய்யப்பட்டுவிட்டதனால் அதற்குப் பதிலாக யூரியாவுடன் அஜிநெமோட்டோ (மொனோசோடியம் குளூட்டாமேற்று) கலந்து விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்துகின்றார்கள் என அறிய முடிகின்றது. உணவுக்கு பயன்படுத்தப்படும் அஜிநெமோட்டோவுக்கு இவ்வளவு சக்தியிருப்பதையும் அது எமதுடலில் எவ்வாறான விளைவுளை ஏற்படுத்தும் என்பதனையும் அநுமானிக்க முடிகின்றதா?
தாவரங்கள் (Plants), பயிர்கள் (Crops), களைகள் (Weeds) என்பனவற்றிற்கும் மேலாக மூலிகைத் தாவரங்கள் (Medicinal Plants) எனும் ஒருவகையையும் நாம் இதில் சேர்த்துக்கொள்ளலாம். மருத்துவக்குணங்கொண்ட மூலிகைத் தாவரங்களும் தாவரவகையினதே. மாற்றி வாசித்தால் ஒவ்வொரு தாவரத்திற்கும் மருத்துவக் குணங்களுண்டு என்பதாகும். இந்த இயல்பை புரிந்து கொண்டால் அவற்றை நாம் எமது தேவைக்காக பயன்படுத்துவோமாயின் அதற்காக மூலிகைத்தாவரங்களை நடுகைசெய்து அறுவடை செய்வோமாயின் அவையும் பயிர்களே!. மேலும் இவ்வாறான மூலிகைத்தாவரங்கள் அநேகமாக களைகளாகவே எமது வயல்நிலங்களில் காணப்படுகின்றன. நாம் எண்ணுகின்ற அநேகமான களைகள் மூலிகைத்தாவரங்களாக பாரம்பரிய மற்றும் சித்த வைத்தியத்தில் பாரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை நாம் வளர்க்கும் பயிர்களுடன் போட்டிபோடுவன எனவும் இவற்றினால் பயிர்களில் பலவிதமான பீடைகள் மற்றும் நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனாலும் மேலும் பயிர்களின் விளைச்சலை பாதிக்கும் காரணிகளாகவும் காணப்படுகின்றன. குறிப்பிட்டுச் கூறினால் நெல்வயல்களில் வளரும் கோரைப்புல் ஓரு பாரதூரமான களையாக காணப்படுகின்றது. பலவிதமான கோரைப்புற்கள் வயல்களில் நெற்பயிருக்கு போட்டியாக வளருவதனால் நெல்லுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் இடத்தையும் தாமே விரைந்து வளர்ந்து எடுத்துக்கொள்ளும் வீரியம் உண்டு. அதேபோல இவ்வகையான களைகள் எந்தவித பராமரிப்புமின்றி சிறப்பாக விரைவாக வளரக்கூடிய ஆற்றலை இயற்கையாகவே கொண்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில் எந்தத்தாவரமும் இம்மண்ணில் சிறப்பாக வளரக்கூடிய ஆற்றலுள்ளவையாகவே கணிக்கப்படுகின்றன. இன்னொருவகையில் பார்த்தால் மூலிகைத் தாவரங்கள் இயற்கையாகவே மலைகளிலே வளர்ந்து அவற்றை சேகரித்து மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றார்கள். பலவகையான மருந்துகள் உணவாகவே பயன்படுத்தப்படுகின்றன. உணவே மருந்து, மருந்தே உணவு.
களைகளை சேகரித்து அவற்றின் மூலிகைக்குணத்திற்கேற்ப அவற்றை பயன்படுத்தலாம். ஆக மொத்தத்தில் களைகளை பயிர்களாக பயன்படுத்தினால் நாம் அனாவசியமாக விசிறும் களைநாசினியும் அதற்கான செலவும் மீதியாகும். மேலும் நாம் உள்ள சூழலும் பாதுகாக்கப்படும். பயிர்களுடன் களைகளையும் ஏனைய பயிர்களாகவே நாம் பயன்படுத்தினால் அந்த குறிப்பிட்ட நிலத்திலிருந்து பெறப்படும் முழுமையாக ஆதாயம் கிடைக்கும். சூழலும் பாதுகாக்கப்படும்.
மேட்டுப்பயிர்ச்செய்கையில் வளரும் பயிர்களான கத்தரி, தக்காளி, மிளகாய், வெங்காயம் இவற்றுடன் அறுகம்புல் களையாக வளருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவும் களைநாசினி பயன்படுத்துகின்றார்கள். ஆனால் கத்தரி தக்காளியுடன் அறுகம்புல்லையும் பயிர்களாக பயன்படுத்தினால் அதிக இலாபம் கிடைக்கும். அறுகம்புல்லிலிருந்து சாறுபிழிந்து அதனை தற்போது பலரும் அருந்தத்தொடங்கிவிட்டனர். அந்தளவிற்கு மருத்துவ குணங்களைக்கொண்ட அறுகம்புல்லை நாம் அழிப்பது மட்டுமன்றி அதனால் தேவையற்ற செலவினத்தையும் ஏற்படுத்தி நாம் வாழும் சூழலையும் அழித்துவிடுகின்றோம். நாம் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய் கிழமையில் ஒருநாளில் எந்த உணவினையும் உண்ணாது பட்டினியாக இருக்கும். பின்னர் அது அறுகம்புல்லை உண்டு தனது உணவுக்கால்வாயை சீர்படுத்திக்கொள்ளும். தினமும் பலவகையான உணவுகளை நாம் எமது உணவுக்கால்வாயினுள் திணிக்கின்றோம். ஒருநாளுக்காவது அதற்கும் ஓய்வு தேவைப்படுகின்றது அல்லவா. அந்த முயற்சியில் நாயார் இறங்கி தனது சமிபாட்டுத்தொகுதியை சீர்செய்யும் நிலையைப் பாரீர். நாய்க்குத் தெரிந்தது எம்மவர்க்கு தெரியுதில்லை என ஒரு சிலர் முணுமுணுப்பதும் கேட்கின்றது. இல்லையில்லை எம்மவர்க்கும் தெரிந்திருக்கின்றது என்கின்றார்கள் மற்றையோர். வவுனியா அம்மாச்சி உணவகத்தில் அறுகம்புல் சாறும் விற்பனையில் முன்னணியில் நிற்பதாக அறியக்கிடைக்கின்றது.
அனைத்தையும் ஒருமித்து பார்த்தால் பயிர்கள், களைகள்; மூலிகைகள் ஆகிய தாவரங்களை நாம் பயன்படுத்த முனைந்தால் அனைத்திலிருந்தும் எமக்கு பயன்கள் கிடைக்கும்.

Prof.G. Mikunthan