நாள் பட்ட நோய்களுடன் நலமுடன் வாழ்தல்!-வைத்திய கலாநிதி வேல்.சாரங்கன்

உயர்குருதி அமுக்கம் (Hypertension), நீரிழிவு (Diabetes), முடியுரு நாடிநோய் (Ischemic Heart Disease- இருதய நோய்), பாரிசவாதம் (CVA- Cerebro Vascular Disease), நாள்பட்ட சிறுநீரக வியாதி (CKD-Chronik Kidney Disease) போன்றவை நாள்பட்ட தொற்றா நோய்கள் என மருத்துவ ரீதியாகப் பட்டியலிடப்படுகின்றன.

பொதுவாக மேலைத்தேய மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவ நடைமுறையில் இதுவரை எட்டப்பட்ட மருத்துவ வளர்ச்சியினால் இவ்வாறான நோய்களை முற்றாக இல்லாது ஒழித்து மருந்துப்பாவனை தேவையற்ற நிலையை ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் இந்நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், அவற்றின் பாதிப்புக்களை முற்கூட்டியே அறிதல், பாதிப்புகளை (Complications) தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் நோய்களை முகாமித்து நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை இயன்றளவு சிறப்பாகப் பேண மேலைத்தேய மருத்துவம் முயல்கிறது. ஆக,இந்நோய்களிற்கான மருந்துப்பாவனை வாழ்நாள் முழுவதும் தேவைப்படக்கூடியது என்பதை நோயாளிகள் விளங்கிக்கொள்வது அவர்கள் தாமாக சிகிச்சை பின்பற்றுதலிருந்து விலகிக் கொள்வதை தவிர்ப்பதற்கு அவசியமானது.

மருத்துவக் கண்காணிப்பிலும், ஒழுங்கான மருந்து பாவனையிலும் இருக்கும் சில நோயாளிகள் தொடர்ச்சியாக தமக்கு “பிரசர், சுகர் நோமலாக இருந்தது, அதனால் கிளினிக் போக வில்லை என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

இது தவறானது, மருந்துப்பாவனையினாலேயே இந்நோய்கள் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதையும் நோயாளிகள்மனதில் கொள்ள வேண்டும். ஆகவே, கிரமான மருத்துவக் கண்காணிப்பு அவசியமானது. பரிசோதனைகளின் படி ஒருவருக்கு குருதியமுக்கம், குருதிக் குளுக்கோஸ் அளவு குறைவான நிலையில் காணப்படின் தேவைக்கேற்ப மருந்துகளைக் குறைப்பதும் அரிதாக சிலருக்கு குறித்த நோய்க்கான மருந்துகள் நிறுத்
தப்படுவதும் மருத்துவ கண்காணிப்பிலேயே செய்யப்படும்.

கிரமமான மருத்துவ சிகிச்சை பின்பற்றுதல் (Regular Clinic Follow Up) ஏன் அவசியமானது?

 • மேற்குறித்த நாள்பட்டநோய்களின் தன்மை நோயாளியின் வயது மற்றும் அவரிற்கு இருக்கும் ஏனைய நோய் நிலைகளுடன் மாறுபடக்கூடியது.
 •  ஆகவே, நோய் கண்டறியப்பட்ட போது ஒருவருக்கு தேவைப்பட்ட மருந்து (Dose Adjustments)ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்துவமானது.
 • மருந்துகள் ஒவ்வொன்றும் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும். அவற்றின் பிரதான பயன்தரு விளைவுகளை விட பக்கவிளைவுகளின் தீவிரம் நோயாளியை பாதிக்கும் பொழுது அம்மருந்துகள் குறைக்கப்படவோ நிறுத்தப்படவோ வேண்டியதோடு அவற்றிற்கான மாற்று மருந்துகள் சேர்க்கப்படுதல் வேண்டும்.
 • உயர் குருதியமுக்கம் (பிரசர்), நீரிழிவு (டயபற்றிஸ்), கொலஸ்ரோல் ஆகிய நாள்பட்ட நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் தொடர்ச்சியாகப் பேணப்படின் உயிராபத்தை விளைவிக்கும் தன்மையை நேரடியாகக் கொண்டிருப்பதில்லை. இவற்றின் கட்டுப்பாடின்மை மற்றும் நீண்ட காலத்திலான பாதிப்புக்களே (Complications)உயிராபத்தை உண்டு பண்ணுகின்றன. இப்பாதிப்புகளை தடுக்கவும் ஆரம்பத்திலேயே கண்டறியவும் கிரமமான மருத்துவ பின்பற்றல் அவசியமானது.
 • நீரிழிவு, உயர்குருதியமுக்கம்,முதலிய நோயுள்ளவர்களிற்கு ஆறுமாதம் அல்லது ஒருவருட காலப்பகுதிக்கு ஒரு முறை சிறுநீரகப்பரிசோதனை செய்யப்படுவது அவசியமானது. இது குருதிப்பரிசோதனை மூலமாகவோ அல்லது சிறுநீரில் புரதத்தின் அளவை பரிசோதிப்பதன் மூலமாகவோ ஆரம்பத்திலேயே கண்டறியப்படக் கூடியது, தேவைப்படின் “ஸ்கான்” (Ultrasound Scan) மற்றும் மேலதிக சோதனைகளை மருத்துவர்கள் ஒழுங்கு செய்வர். கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் குருதிய முக்கத்தின் பாதகமான விளைவுகளில்
  ஒன்று சிறுநீரக செயலிழப்பு என்பதை நோயாளிகளின் மனதில் கொள்ளவேண்டும்.
 • இதுதவிர, இருதயப்பரிசோதனை, கண்பரிசோதனை, நரம்புப்பரிசோதனை முதலியன கிரமமாக குறித்த கால இடைவெளியிலோ தேவைக்கேற்பவே செய்யப்படும்.

நோயாளிகள் செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்.

 • அரச மருத்துவமனையிலோ, அல்லது தகுதிவாய்ந்த தனியார் மருத்துவ நிலையங்களிலோ, கிரமமான மருத்துவ பின்பற்றலில் இருத்தல் வேண்டும்.
 • தமது நோய்கள் பற்றியும் அதற்கு தாம் பாவிக்கும் மருந்துப்பட்டியலையும் தமது வைத்தியரிடம் கேட்டு அறிவது நோயாளிகளின் உரிமை ஆகும்.
 • மருத்துவமனைக்கு வர நேருகின்ற சந்தர்ப்பத்தில் தமது “கிளினிக்” பதிவு புத்தகத்தை கட்டாயமாக கொண்டு வருதல் வேண்டும்.
 • மருத்துவ ஆலோசனைக்கேற்ப கேட்கப்படும் பரிசோதனைகளை கொடுக்கப்படும் திகதிகளில் சமூகம் தந்து மேற் கொள்ள வேண்டும்.
 • அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பின்பற்றும் அனைத்து நீரிழிவு நோயாளிகளும் வருடத்தில் ஒருமுறை யாழ் போதனா வைத்தியசாலையின் கிளினிக் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் அமைந்துள்ள “நீரிழிவு சிகிச்சை நிலையம்” (Diabetic Center) இல் சிறப்பாக
  பார்வையிடப்படுவதோடு, பரிசோதனைகள் மற்றும் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை அவர்களிற்கு வழங்கப்படுகிறது. இது அவர்களின் மாதாந்த கிளினிக்கிற்கு மேலதிகமான ஒன்று என்பதோடு, வருடா வருடம் குறித்த திகதியில் பின்பற்றப்பட வேண்டியது.
 • மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கிப் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
 • மருத்துவ ஆலோசனைகளுக்கேற்ப உணவு மற்றும் உடற்பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்.
 • நோவுக்கு பாவிக்கப்படும் பல மருந்துகள். (Painkillers) சிறுநீரகபாதிப்பு, இரைப்பைபுண் முதலிய பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியன என்பதால் மருத்துவ ஆலோசனை இன்றி நோ மருந்துகளை பாவித்தலாகாது.

கட்டுப்பாட்டுக்குள் நோய்களை வைத்திருத்தலும் குறைவற்ற செல்வமே!
சரியான மருத்துவ பின்பற்றலோடு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துங்கள்!

வைத்திய கலாநிதி வேல்.சாரங்கன்
யாழ்.போதனா வைத்தியசாலை.