உடலுக்கு நன்மை தரும் சூரிய ஒளி – மருத்துவர் S.கேதீஸ்வரன்

சூரிய ஒளியிலுள்ள புறஊதா கதிர்கள் (Ultra Violet Brays) எமது தோலில் விற்றமின் டி உற்பத்தியாவதற்கு அவசியமாகிறது. எமக்குத் தேவையான விற்றமின் டி இல் பெரும்பகுதி குறிப்பாக 90 தொடக்கம் 95 வீதமானவை சூரியஒளி மூலமாகவே தோலில் உற்பத்தியாகின்றன.

போதிய சூரியஒளி நேரடியாகத் தோலில் படாவிட்டால் விற்றமின் டி குறைபாடு ஏற்பட்டும் பலநோய்கள் ஏற்படலாம்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி உலகில் பலருக்கு விற்றமின் டி பற்றாக்குறையிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி குறைவில்லாமல் கிடைக்கும் இலங்கை போன்ற நாடுகளிலும் விற்றமின் டி குறைபாடு பலருக்கு இருப்ப தென்பது அதிர்ச்சிகரமான விடயமாகும்.

வெள்ளையர்களைவிடக் கறுப்பான தோலுடைய ஆசிய நாட்டவர்களில் தோலில் அதிகம் காணப்படும் மெலனின் (Melanin) எனும் நிறப் பொருளால் சூரியஒளி தோலினுள் ஊடுருவுவது குறைவடைகின்றது. இதனால் வெள்ளையர்களைவிட ஆசிய நாட்டவர்களான நாம் அதிகநேரம் சூரிய ஒளியை உடலில் படவிட வேண்டும்.

சூரியஒளியும் விற்றமின் டி உம் உடலுக்கு தரும் நன்மைகள்

  1. விற்றமின் டி ஆனது கல்சியம் அகத்துறிஞ்சப்படுவதற்கு அவசியமாகும். ஆக எலும்பு, பல் ஆரோக்கியத்திற்கு சூரியஒளி அவசியமாகிறது. குறிப்பாக மாதவிலக்கு நின்றபின் பெண்களில்
    ஏற்படும் ஒஸ்ரியோபுறோசிஸ் (Osteoporosis)எனும் நோய்க்கு கல்சியம் குறைவது காரணமாக விளங்குகிறது.
  2. சூரிய ஒளியினால் எமது உடலில் செறோரொனின் (Serotonin) எனும் ஓமோன் அதிகமாக சுரக்கப்படுகின்றது. இந்த ஓமோன் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றது. சூரியஒளி குறைந்த குளிர்காலங்களில் மேலைத்தேய நாடுகளில் நரம்புத் தளர்ச்சி அதிகம் ஏற்படுகின்றது.
  3. சூரியஒளியானது உடலின் கொலஸ்ரோல் அளவு, குருதியமுக்கம் என்பவற்றைக் குறைக்கின்றது. வெயில் குறைந்த குளிர் காலங்களிலேயே மாரடைப்பு பொதுவாக ஏற்படுகின்றது.  எனவே சூரிய வெளிச்சம் மாரடைப்பை குறைக்கின்றது என்பதை ஊகிக்கலாம்.
  4. அதுமட்டுமா! சூரியஒளி உடலில் படுவதால் உடல்பருமன் குறைவடைவதுடன் நீரிழிவு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  5. சூரியஒளியினால் உடல்நோ,மூட்டுவாதம் என்பன குறைவடைகின்றன.
  6. அதிகமான சூரியஒளி குறிப்பாக வெள்ளையர்களின் தோலில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். ஆனால் அளவான சூரியஒளி உடலில் படுவதால் பல்வேறு விதமான புற்றுநோய்கள் ஏற்படுவது குறைவடைவதாக அண்மையில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மார்புப் புற்றுநோய், குடல்புற்றுநோய், கருப்பைப்புற்றுநோய், இரப்பைப்புற்று நோய் என்பன அவற்றில் சிலவாகும்.
  7. மிதமான சூரிய ஒளியினால் மாதவிலக்குப் பிரச்சினைகள் குறைவடைகின்றன. அத்துடன் மாதவிலக்கு நிற்பதும் தள்ளிப்போடப்படுகின்றது. குறிப்பாக ஆண்மைத்தன்மை அதிகப்படுவதுடன் பெண்களில் குழந்தைப் பேற்றுக்கான சாத்தியங்கள் அதிகப்படுத்தப்படுகின்றன.
  8. சூரியஒளி உடலில் படுவதால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கின்றது. விற்றமின் டி சில உணவுகளிலேயே காணப்படுகின்றது. தன்மையுள்ளருனா சமன் (Tunasaman) போன்ற மீன்களில் விற்றமின் டி காணப்படுகிள்றது. பால், முட்டை என்பவற்றிலும் விற்றமின் டி
    காணப்படுகின்றது. ஆனால் உணவு மூலம் எடுக்கப்படும் விற்றமின் டி உடலுக்கு போதுமானது அல்ல. விற்றமின் டி உள்ள மாத்திரைகள் இப்போது பாவனையில் உள்ளன. ஆனாலும் இந்த
    வகையில் எடுக்கப்படும் விற்றமின் டி யால் மேற்குறிப்பிட்ட நன்மைகள் அதிகம் கிடைப்பதில்லை என ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.

ஒருநாளைக்கு உடலில் படவேண்டிய சூரிய ஒளியின் அளவு ஆசியநாட்டவர்களான நாங்கள் ஒவ்வொரு நாளும் அண்ணளவாக அரைமணிநேரம் வெயிலில் நின்றால் போதுமானதாகும்.  குறிப்பாக காலை 6 மணி தொடக்கம் 10 மணிவரை அல்லது மாலை 4 மணி முதல் 6 மணிவரையுள்ள நேரத்தில் சூரியஒளி படத்தக்கவாறு நிற்கலாம்.

இந்த நேரத்தில் உடற்பயிற்சி அல்லது நடப்பதனால் எமக்கு இரட்டிப்பு நன்மை ஏற்படும். ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் குறைவான ஆடைகளுடன் அரைமணி நேரம் வெயிலில் நின்றால் அவருக்கு 8 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் சர்வதேச அலகு விற்றமின் டி உடலில் உற்பத்தியாகின்றது. இவ்வளவானது நாளொன்றுக்கு போதுமானதெனக் கூறப்படுகின்றது.

மருத்துவர் S.கேதீஸ்வரன்
பொது வைத்திய நிபுணர்