வடமாகாணத்து அபிவிருத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றது Prof.G. Mikunthan

உழவுத்தொழிலுக்கு உரமிடாதுவிட்டால் எதுவிருந்தும் இறுதியில் உண்பதற்கு என எதுவுமிருக்காது. இங்கே உரமிடுதல் என்பது வெளிநாட்டு அசேதன இரசாயனப் பொருட்களை திணிப்பதல்ல. மாறாக உழவுத்தொழிலை சமகால விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் உள்வாங்கி அதனை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லல் என்பதாகும். உழவுத்தொழிலில் அக்கறை காட்டுகின்ற இளையவர் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது என பலதரப்பட்ட தரவுகள் எடுத்துக்கூறுவதிலிருந்து அதற்கான முக்கியத்துவம் நலிவடைந்து வருகின்றது என்பதுதானே பொருள். இதனை அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு திட்டமிடும் வல்லுனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே கட்டடங்களும் எமக்கொவ்வாத தொழில்நுட்பமும் எந்தவிதத்திலும் எமக்கு அபிவிருத்தியை தந்துவிடாது.
வடமாகாணத்து அபிவிருத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமானளவுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. எமது மொத்த உள்நாட்டு (வடமாகாண) உற்பத்தி GDP (Gross Domestic Product) என்பது 3-4 சதவீதமாக இருக்கும் அதேநேரத்தில் தென்பகுதியிலுள்ள மற்றைய மாகாணங்களின் புனுP மிகவும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை நாம் கண்டறிந்து கொண்டால் எமது பகுதியிலிருந்து உற்பத்தியாகிப் பொருட்கள் உலகசந்தைக்கு செல்லாததே காரணமாகும். எமது மாகாணத்தின் உற்பத்தி ஒருபுறமிருக்க அதனை தரமாக அதுவும் உலகத்தரம்வாய்ந்த அந்நிய செலாவாணியை பெறக்கூடியதாக உருவாக்கி உலகச்சந்தைக்கு எடுத்துச்சென்றாலன்றி இதனை நாம் உயர்த்திக்கொள்ள முடியாது. சுருக்கிச்கூறினால் ஒரு தேசத்தின் சிறப்புத்தன்மையை அல்லது ஆரோக்கியத்தை கட்டியங்கூறும் சுட்டியாகவே மொத்த உள்ளுர்உற்பத்தி அமைந்திருக்கின்றது. ஆதலினால் வடமாகாணத்தின் ஆரோக்கியத்தை கட்டியெழுப்பவேண்டுமாயின் இந்தச் சுட்டியின் அதிகரிப்பை நோக்கிய அபிவிருத்தி அமையவேண்டும். தரமான உற்பத்தி மற்றும் மதிப்பேற்றஞ்செய்த பொருட்கள் உலகச்சந்தையை எட்டிப்பார்ப்பதற்கான உலகத்தரத்தை கொண்டிருக்கவேண்டும். தொடர்ந்தும் உள்ளூர்ச்சந்தையை நம்பி எமது அபிவிருத்தியை குறிப்பாக உற்பத்தியை நாம் நகர்த்தக்கூடாது. மாறாக வடபகுதிப்பொருட்களுக்கு நல்லதொரு சந்தைவாய்ப்பை தென்பகுதியும் தரமுடியாது. ஆதலினால் உலகச்சந்தைக்கான தரத்துடன் கூடிய சிறந்த உற்பத்திப்பொருட்களை உற்பத்திசெய்யும், பொதிசெய்யும் வழிவகைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தால் இத்தேசம் விடிவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். வாய்ப்புக்களை பலவகைகளிலும் உருவாக்கிக்கொடுத்தாலன்றி இப்பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களும் அரிதாகவே காணப்படுகின்றன. சுயதொழில் முயற்சித்திட்டங்கள் இன்னும் பலமாக உருவாக்கப்படவேண்டும். அதிலொன்றாகவே சுற்றுலாத்துறையை இனங்காண்கின்றனர். ஆனாலும் இவையனைத்தும் இருந்தாலும் இளையவர்கள் விவசாயத்தொழிலில் காட்டும் அக்கறை மகிழ்ச்சி தருவதாக இல்லை. இது விவசாய நாடான எமக்கும் விவசாயத்தில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த எமது மாகாணத்திற்கும் ஒரு நல்லசெய்தியாக இல்லை. வசதிகள் அதிகமாக இல்லாத காலங்களில் சிறப்பாக செய்யப்பட்ட விவசாயம் தற்போது மந்தநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமாக காலநிலை மாற்றத்தை நாம் முன்வைத்தாலும் இவையனைத்தையும் இருக்கின்ற விஞ்ஞான தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றியமைக்க முடியும் என பிறதேசங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் கட்டியங்கூறிநிற்கின்றன. வரண்ட பாலைவனங்களை பசுமையாக்க முடியுமானால் எமது பிரதேசத்தை ஏன் நாம் மாற்றிக்காட்ட முடியாது. இதற்கான ஊக்குவிப்பு எதிர்பார்த்தளவில் இல்லையென நாம் எடுத்தமாத்திரத்தில் எவரையும் குறைகூறமுடியாது. அனைவரதும் பங்களிப்பு அவசியமாகின்றது என்றதனை நாம் இன்னும் கவனத்திற்கொள்ளவில்லை.

Prof.G. Mikunthan