நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. உணவுக்கட்டுப்பாட்டினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியுமா?

கேள்வி : எனது வயது 25. எனது மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதல் (License Medical Certificate ) பரீட்சையின் போது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவுப 250 Mg/idl ஆகவும் FBS 160 Mg/idl ஆகவும் காணப்பட்டது. இதன் பின்னர் HbAIC என்ற குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அளவானது 8.5 ஆக காணப்பட்டது. எனது எடை 90Kg எனது குடும்பத்தில் எவருக்கும் நீரிழிவு நோய் இருக்கவில்லை. என்னிடமும் இந்த நோய்க்கான அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. உணவுக்கட்டுப்பாட்டினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியுமா? தயவு செய்து ஆலோசனை தரவும்.

பதில் : உங்களுடைய குருதிப்பரிசோதனை முடிவுகள் அனைத்துமே உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்ப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. உங்களுடைய உடற்பருமனும் அதிகமாக இருக்கின்றது. உங்களுடைய உயரத்தை குறிப்பிட்டிருந்தால் உடற் திணிவுச் சுட்டெண்ணினை் (BMI) கணிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.
நீரிழிவு நோயானது அதிக தண்ணீர்த்தாகம், அதிகளவு சிறுநீர் வெளியேறுதல், அதிகளவு பசி மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்ற அறிகுறிகளுடக் வெளிப்படலாம். நீரிழிவு நோயானது இவ்வாறான அறிகுறிகள் எதுவும்மின்றியும் ஏற்படலாம் என்பது மிக முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். நீரிழிவு நோயானது குறிப்பாக வகை2 ஏற்படுவதற்கு பரம்பரைக்காரணிகள் மாத்திரமல்லாது சூழல் காரணிகளும் ( வாழ்க்கை முறை) காரணமாக அமைகின்றன.
நீரிழி நோயினைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மிகவும் இன்றியமையாததாகும். சீனிச் சத்துள்ள மற்றும் அதிக மாப்பொருள் அடங்கியுள்ள உணவுப்பதார்த்தங்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை அவசியமாக பயண்படுத்த வேண்டும்.
எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியம். உங்களுக்கு மெற்போமின் என்ற குளிசை மருந்தையே மருத்துவர் பொதுவாக பரிந்துரை செய்வார்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாதவிடத்து நீண்ட காலத்தில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
குறிப்பாக பார்வை மங்கலடைதல், சிறுநீரகப் பாதிப்பு, நரம்புத்தொகுதி பாதிப்பு, இருதய நோய் போன்றன ஏற்படலாம்.
நீங்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்று ஒழுங்காக மருந்துகளை உள்ளெடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீண்டகால பாதிப்புக்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,